சும்மாதான்

நானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....

தனி தெரு கேட்டு போராட்டம்!!! முற்பகல் 9:22

நான் பிறந்தது முதல் வசித்து வருவது நேதாஜி நகரின் இரண்டாவது குறுக்குத்தெருவில். இரண்டாவது குறுக்குத்தெரு என்பது இரண்டாவது தெருவையும் மூன்றாவது தெருவையும் இணைக்கிற ஒரு சிறிய தெருவாகும்.

"டேய் இதெல்லாம் ஒரு தெருவா? குறுக்கு சந்தையெல்லாம் தெரு கிறுன்னு சொல்லிக்கிட்டு அலையாதீங்கடா......" என்பன போன்ற வார்த்தைகளை கேட்டாலே கோபம் பொத்துக்கொண்டு வரும் எனக்கு. ஆனாலும் 2 ஆவது தெரு பசங்களும் சரி, 3 ஆவது தெரு பசங்களும் சரி எங்களை இப்படி கிண்டல் செய்வதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.


எங்களது தெருவில் இருப்பது மொத்தமே நான்கு வீடுகள்தான். அதிலே என் வயதொத்தவர்கள் மொத்தமே நான்கு பேர்தான். நட்பு, மோதல், விளையாட்டு - எல்லாமே எங்கள் நால்வருக்குள்தான்.

காலப்போக்கில் வேறு வழியில்லாமல் நாங்கள் 2 ஆவது தெரு பசங்களோடு விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. மேலும் எங்களது தெருவின் பெயரிலேயே "2" இருப்பதனால் வேறு தெரு பசங்களோடு விளையாடுவது என்பது இயலாத காரியமாயிற்று. கில்லி, கோலி, பம்பரம், கிரிக்கெட் எல்லாம் அவர்களோடு விளையாடுவோம். இருந்தாலும் எப்போதும் எங்களுக்குள் ஒரு போட்டி இருந்துகொண்டேதான் இருந்தது.

அப்போதுதான் நேதாஜி நகரில் கிரிக்கெட் போட்டி நடக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. நாங்களும் 2 ஆவது தெரு பசங்களும் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கினோம். எங்கள் தெருவுக்கும் அவர்கள் தெருவுக்கும் பொதுவாக இருக்கிற ஒன்றே ஒன்று "2 ". ஆகவே டெண்டுல்கர் மேல் நாங்கள் வைத்த அன்பையும் சேர்த்து 2டுல்கர் (2dulkar) என்று எங்கள் அணிக்கு பெயர் வைத்தோம். எங்களது அணியின் பெயர் மிகவும் பிரபலமானது.அணியின் தலைவனாக 2 ஆவது தெருவின் ரகுவை எல்லோருமாக சேர்ந்து தேர்ந்தெடுத்தோம். விக்கெட் கீப்பர் பொறுப்பு எங்கள் 2 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்த செந்தில் ஏற்றான். அவன் ஒரு நல்ல தொடக்க ஆட்டக்காரனும் கூட. எங்கள் அணியின் சேவாக் என்று சொல்வோம் அவனை. அவனுடைய பாட்டி வீடு 2 ஆவது தெருவில் இருப்பதனால் அந்த பசங்களுடன் அவனால் இயல்பாக ஒத்துபோக முடிந்தது. அணியின் வேகபந்துவீச்சாளர் அடியேன் நாந்தான்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியும் வந்தது. யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு எங்களது அணி மிகச்சிறப்பாக விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் வென்றுகொண்டே இருந்தோம். ஒவ்வொரு வெற்றியும் எங்களது குறுக்குதெரு பசங்களின் திறமையால்தான் கிடைக்கிறது என்கிற எண்ணம் எங்கள் மனதில் ஆழமாக வேரூன்ற துவங்கியது.

அரையிறுதி ஆட்டம்: முதலில் பேட்டிங் செய்த நாங்கள், மிகவும் மோசமாக விளையாடி வெறும் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நாங்கள் பந்து வீச துவங்கினோம். முதல் ஓவரை வழக்கம் போல் நான் வீசினேன். தொடர்ந்து 2 நான்குகள் (fours) அடித்துவிட்டார்கள் எதிரணியினர். எங்கள்அணித்தலைவன் ரகு என்னைபார்த்து,
"டேய், வெறும் 35 ரன்தாண்டா அடிச்சிருக்கோம். லெக் சைட்ல போடாதடா...ஆப் சைட்லையே போடறா..." என்றான்.
 "அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறாண்டா" என்றேன்.

அதன் பிறகு எனக்கு பந்துவீசவே வாய்ப்பு தரப்படவில்லை. எதிர்பாராத விதமாக திடீரென முதல் முறையாக பந்து வீசிய நாராயணனுக்கு 3 விக்கெட்டுகள் விழ, ஆட்டத்தின் போக்கே மாறி போனது.

தட்டுத்தடுமாறி, முட்டிமோதி 2 ரன் வித்தியாசத்தில் நாங்கள் அறையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டோம்.

உற்சாகத்தில் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, ரகு என்னைப்பார்த்து சொன்னான், "டேய், பௌலிங் போடறது எப்படின்னு நாராயனன்கிட்ட கத்துக்கடா. நீயெல்லாம் என்னத்த போட்ற..." என்று அநியாயத்திற்கு கிண்டல் செய்துகொண்டே வந்தான்.

2 ஆவது தெரு பசங்க ஒவ்வொருவராய் சேர்ந்துகொண்டு எங்களது குறுக்கு தெரு பசங்களையே குறிவைத்து கிண்டல் செய்வது போல் இருந்தது.
இனியும் பொறுப்பதற்கு இயலாது என்று நாங்களும் திருப்பி பேசினோம். வாய்ச்சண்டை கைச்சண்டையாக மாறி, கால்சண்டையாக போனது.
அன்று இரவு, எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நாங்கள் நால்வரும் சந்தித்தோம்.
தனி தெருவாக நாங்கள் இனி வரும் போட்டியை சந்திப்பது என்று முடிவெடுத்துக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது என் தந்தை அங்கே வந்தார். "என்னங்கடா? என்னாச்சி? இநத இருட்டுல மொட்டை மாடியில போயி உக்காந்து பேசிக்கிட்டுருக்கீங்க? "

எல்லா விவரத்தையும் சொன்னேன் என் அப்பாவிடம்.
2 ஆவது தெரு பசங்களையும் கூட்டிட்டு வர சொன்னாரு. அவனுங்களும் வந்தானுங்க.
அப்பா சில கேள்விகள் கேட்டாரு.
1. "கேப்டன் பதவி வேணுங்குற ஆசையில போர்க்கொடி தூக்குவானுங்க. அந்த மாதிரி".......என்று இழுத்தார்.
"இல்லப்பா" என்கிற ரீதியில் தலை அசைத்தேன்.
2 . "இன்னொரு குழுவை நம்முடைய குழுவுடன் சேர்த்துக்கொள்ளும்போது, நம்முடைய தேவைக்காக மட்டுமே செர்த்துக்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால், அவர்களின் சிறு சிறு தவறுகளை கூட நம்மால் சகித்துக்கொள்ள முடியாமல் போய்விடும்".
 3 . தனியாக பிரிந்தால் நம்மால் நம்முடைய இலக்கை அடைய முடியுமா என்று யோசிக்க வேண்டும். நான்கு பேரை வைத்து நீங்க என்ன பண்ண முடியும், ஏழு பேரை வெச்சி அவங்க என்ன பண்ணமுடியும்.
4 . குழுவை, கூட்டத்தை, அணியை, மக்களை பிரிக்கிறதுக்கு முன்னாடி, ஏன் பிரிக்கிறோம், யாருக்காக பிரிக்கிறோம், பிரிச்சபிறகு நம்மோட குறிக்கோள் நிறைவேறுமா என்பதை நல்லா யோசிச்சி முடிவெடுக்கணும்.

"உங்களுக்குள்ள நடந்த சண்டைக்கு காரணம் இன்னைக்கி நடந்த நிகழ்ச்சியா தெரியல. உங்க ஆழ் மனசுலையே நீங்க ரெண்டு குழுவா இருக்கீங்க. அதா சரி பண்ணாம நீங்க ஒண்ணா சேர்ந்து வெளையாடி இருக்கீங்க. அதனால வந்த விளைவுதான் இது. "

"பேசி தீத்துக்குங்க. " என்றார்.பதினைந்து வருடங்களுக்குமுன் என் தந்தை சொன்ன வார்த்தைகள் இன்று நடக்கும் தெலுங்கானா சண்டைக்கும்கூட பொருந்துதே என நினைத்து பார்க்கிறேன்.....

முதல்வரின் இலவசத்திட்டம் : இலவசமாய் போனது மூன்று உயிர் பிற்பகல் 1:00

அய்யோ   பாவம் .....

மனசாட்சியே   இல்லையா ......

மனிதநேயம் தொலைந்து போனது..... 

இது போன்ற பலவற்றை , 2007 மே மாதம் எங்கு பார்த்தாலும் மக்கள் பேசிக்கொள்வதை\நாம் பார்த்திருப்போம். மூன்று உயிர்களை எரித்து கொன்றதற்கு யார் காரணம்?

http://www.youtube.com/watch?v=GlPbPRMsZTk

என் தலைப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு தோன்றி இருக்கலாம் .
சிறு வயதில் இருந்தே  பத்திரிகை நிருபர் ஆக வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது.

நமது நாடு சுதந்திர அடையவும் , நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கவும் பத்திரிக்கைகள் பெரும் பங்காற்றின , பத்திரிக்கையின் இத்தகைய பெரும் தொண்டு மக்களின் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருந்தது ,நாளடைவில் பத்திரிகைகள் வியாபார நோக்குடன் செயல் பட ஆரம்பித்தது .

பதவி ஆசையில் குடும்ப சண்டையில் மாறனும் அழகிரியும் சண்டையிடுவதற்கு, பத்திரிகை என்னும் புனித பொருள்தான் கிடைத்ததோ! நடுநிலை செய்திகள் என்பதெல்லாம் மலையேறிப்போச்சி.

அந்த சம்பவம் நடந்த மறுநாள், "ஆ ஊ" என குதித்த மாறன் சகோதரர்கள், பின்னாளில் குடும்ப சண்டை முடிந்து சமரசம் ஆனதும், பலியானவர்களை மறந்தே போனார்கள்.

தினகரன் அலுவலகத்தில் உயிருடன் எரித்தவர்கள் வெளியே விடப்பட்டபோதும் அதே தினகரன் பத்திரிக்கையில் கூட ஒரு கண்டன செய்தியும் இல்லை........இன்னும் சொல்லபோனால் அந்த ஊழியர்களின் முதலாண்டு நினைவஞ்சலியைகூட வெளியிடவில்லை.....

ஆனால் வெட்டியான விஷயத்திற்கு செய்தி போடுவதாகட்டும், வீண் பிரச்சனைகளை உருவாக்குவதாகட்டும், இன்றைய பத்திரிகை உலகம் தூள் கிளப்புகிறது.

1 . ஒரு நாள் கூட ஒரு வார்த்தைகூட பாராளுமன்றத்தில் பேசாத மத்திய அமைச்சரை ஏன் என்று கூட கேக்காதவர்கள்தான் இன்றைக்கி பல பத்திரிகை நடத்திகொண்டிருக்கிரார்கள்.

2 . "PEN IS MIGHTIER THAN SWORD" இந்த பழமொழியை பொய்யாக்கி வரும் இன்றைய பத்திரிக்கைகளும் அதனை சார்ந்த ஊடகங்களும் , தன்னை எதிர்ப்போரை வசைபாடும் இவர்கள் (பிரா ஜட்டி  நடிகர் என்று கிண்டல் செய்வது) எந்த வகையில் உயர்ந்தவர்கள். நடு பக்கத்தில் நடிகையின் "பின் அப்" படங்கள் போடுவது, "இவனுக்கும் அவளுக்கும் அது", என்றெல்லாம் எழுதவே நேரம் சரியாக இருக்கிறது இவர்களுக்கு.

3 . ஒரு சக பத்திரிக்கையாளனை உயிரோடு எரித்தவர்களை வெளியே சுதந்திரமாக உலவ விட்டபோது, ஏன் என்று எதிர்த்து கேள்வி கேக்க இயலாத நிலையிலா இன்றைய பத்திரிகை துறை இருக்கிறது.

 http://www.thehindu.com/2009/12/10/stories/2009121054860700.htmகலைஞர் முதல் கடைகோடி நிருபன் வரை தன்னை ஒரு பத்திரிகையாளன்  என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட வேண்டும் என்று வருத்தத்துடன்  சொல்ல வேண்டிய நிலை.

இத்தகைய மகான்கள் வாழும் இந்த புண்ணிய பூமியில் வாழ இயலாது உயிர் நீத்த அந்த சகோதரர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி .....

 குறிப்பு : லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டபோதே கண்டுகொள்ளாதவர்கள், இதற்காகவா விழித்தெழப்போகிறார்கள்


ஒரு வேளை நானும் பத்திரிகை துறையில் இணைந்திருந்தால் இவர்களைப்போல் வியாபாரியாக மட்டுமே மாறியிருப்பேனோ! நல்ல வேளையாக எனது சிறு வயது ஆசை நிராசை ஆனது..............

இது ஒரு "தமிழ் படத்தின் " ஒரு "தமிழ் பாட்டு" அல்ல! பிற்பகல் 1:28

"தமிழ் திரைப்படத்தில்" வருகிற "ஒ மஹா சீயா" என்ற பாடலின் மூல பாடல்களின் தொகுப்பு இங்கே................

ஒ  மஹா சீயா  - உயிரின்  உயிரே  (காக்க  காக்க )
நாக்க மூக்கா - நாக்க மூக்கா (காதலில் விழுந்தேன் )
ஒ ஷக்கலக்க  - ஷக்கலக்க  பேபி  (முதல்வன்)
ரண்டக்க  - ரண்டக்க  (அந்நியன்)
உல்லாஹி ஒ  உல்லாஹி - ஏதோ  ஏதோ  ஒன்று  (லேசா  லேசா )
நகும்  நகும்  - ஏழையின்  சிரிப்பில்
டைலாமோ  டைலமோ - டிஷ்யூம்
ரேஹதுல்ல - கஜினி
சம்பா  சம்பாலே  - தொட்டா பவருடா (தொட்டி  ஜெயா)
ஹசிலி  பிசிலி  - ஆதவன்
யெப்பான்  சிப்பான்  - ஜித்தன்
பல்லேலக்க - சிவாஜி
முக்கால  - காதலன்
மியா மியா - கந்தசாமி
லாலாக்கு  லாலாக்கு  - சூரியன்
பூம்  பூம்  - பாய்ஸ்

ஏதாவது திருத்தம் இருந்தா சொல்லுங்கோ.................

வாக்களித்த அப்பாவி!!! முற்பகல் 3:34

கோட்டுக்குக் கீழிருக்கும்
கூலித்தொழிலாளி
கடுமையாய் உழைத்தாலும்
கஞ்சிகூட கிடைப்பதில்லை!நிலைமாற வேண்டுமென
நம்பிக்கையாய் வாக்களித்தால்,
விலையேற்றம், வரிவிதிப்பு
வேறேதும் பெறவில்லை!


தினம் பெறும் கூலிகூட
பேருந்தில் ஏறினாலே
பாதியாய் குறைகிறதே!


ஆட்சி செய்யும்
அரசைப் பார்த்து,
அன்பாய் கேட்டுப்பார்த்தார்!


விலை குறைக்க வேண்டுமென
வாதாடி வேண்டிநின்றார்!


அவரும் முடிவெடுத்தார்!
விலைகுறைப்பு நடத்த அல்ல,
வாஸ்து நிபுணரை சந்திக்க!


நிபுணரும் பதிலளித்தார்!
கண்ணகி சிலைதனிலே
வலதுகை விரிக்க வேண்டும்!
முடியாமற் போனாலோ,
சிலையகற்ற வேண்டுமென்றார்!


மஞ்சள் துண்டணிந்த ஒருவர்
மக்களுக்காக உழைக்க(!) வந்தார்!
அவரும்,
விலைகுறைப்பை வேண்டவில்லை!
கண்ணகி சிலைவேண்டி
கண்டித்து அறிக்கைவிட்டார்!


சிலையகற்றி சிலகாலம்
உருண்டோடிச் சென்றபின்னும்
கவலையில்லை இவர்கட்கு!
திசைதிருப்பும் வேலைதானே,
திருந்தவா பார்க்கிறார்கள்!மாற்றத்தை வேண்டியே
மஞ்சளுக்கு வாக்களித்தோம்!
மீண்டும் வந்தது ஏமாற்றம்!எம் பணத்தை

எமக்களித்தான்!

தொலைகாட்சி எனும் பொருளாய்!அதில் வரும் விளம்பரத்தை
'ஆ' வென பார்க்கவைத்தான்!இடைத்தேர்தல் வந்தாலோ
இறைத்துவிட்டான் எம் பணத்தை!சங்கம் வளர்த்த ஊரையெல்லாம்
சாக்கடையாய் மாற வைத்தான்!ரௌடியிசம்! தாதாயிசம்
ஊழலிசம் வாரிசிசம்!
புதுசு புதுசாய்
பல இசங்கள்!சனநாயகம் என்பதெல்லாம்
சாக்கடையாய் மாறியதிப்போ!
யாருக்குத்தான் ஒட்டு போட?உண்ண உணவின்றி
உழைக்க வேலையின்றி
உயிரிழக்கும் தருவாயில்
ஊசலாடிக்கொண்டிருந்தான்
வாக்களித்த அப்பாவி!


பிரெட் உப்புமா முற்பகல் 10:25

ஒரு நாள் வீட்டில் ரொம்ப போர் அடித்துக்கொண்டிருந்தது...ஏதாவது சாப்பிடலாம் என்றால் ஒன்றுமே இல்லாதது போன்று இருந்தது. ஒரு பாக்கெட் பிரெட் மட்டுமே இருந்தது. எப்பொழுது பார்த்தாலும் பிரெட்டை எண்ணையில் ரோஸ்ட் பண்ணி சாப்பிட்டு சற்று சலித்து விட்டது. அப்பொழுது விட்டத்தை பார்த்தேன்....தரையை பார்த்தேன்...விட்டத்தை பார்த்தேன்....தரையை பார்த்தேன்...என் அறிவிற்கு எட்டிய ஒரு புதிய உணவுதான் இந்த பிரெட் உப்புமா (என்னா பில்ட் அப் குடுக்குராய்ங்கபா)


என்னவெல்லாம் தேவை?

பிரெட் - 10 துண்டுகள்

வெங்காயம் - 1

உருளைகிழங்கு - 1

தக்காளி - 1

பீன்ஸ் - 1

கேரட் - 1

முட்டை - 2

உப்பு - தேவையான அளவு


எப்படி செய்யிறது?

1 . பிரெட்டின் நடுவில் இருக்கும் வெள்ளை பகுதியைமட்டும் எடுத்து சிறிய துண்டுகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

2. வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், உருளைகிழங்கு ஆகியவற்றை தனித்தனியே  சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

3 . வாணலியில் (பெயர்க்காரணம்?) சிறிது எண்ணை விட்டு, நன்கு சூடானதும் வெங்காயத்தை போட்டு தாளிக்க வேண்டும்.

4 . வெங்காயம் வதங்கியதும்,தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.

5. வெங்காயமும் தக்காளியும் நன்கு வதங்கியதும் , நறுக்கி வைத்த காய்கறிகளையும் போட்டு வதக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

6 . காய்கறியில் இருக்கும் நீர் நன்கு வற்றும் வரை வதக்கி விட்டு, பின்னர் பிரெட் துண்டுகளை போட்டு நன்கு கிளற வேண்டும்.

7 . பிரெட்டின் வெள்ளை நிறம் மாறும் வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

8 .தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

9 . இரண்டு முட்டைகளையும் சிறிது உப்பு போட்டு தனியாக கிளறி எடத்து, அதன் பின்னர், வாணலியில் போடா வேண்டும்.

10 . கொஞ்சநேரம் கிளறிய பின்னர், பிரெட் உப்புமா ரெடி.


என்ன மாற்றம் செய்யலாம்?

1 . அசைவம் சாபிடாதவர்கள் முட்டை போடாமல் செய்யலாம். சுவை ஒன்றும் குறையாது.

2 . காய்கறிகள் எதுவுமே வீட்டில் இல்லை என்று கவலை பட வேண்டாம். எந்த காய்கறியும் போடாமலும் செய்யலாம்.

யாருக்கு பரிமாறலாம்?
சாப்பிட்டு பார்த்து சுவையாக இருந்தால் யாருக்கும் பரிமாறலாம். இல்லையெனில் நாம் மட்டும் தண்டனையை அனுபவிக்கலாம்.

ஒட்டு போடலாமே.......

காதலித்துப்பார் கவிதை வரும்! முற்பகல் 8:48காற்றில் மிதந்து வரும்
கானம்கூட - உன்னைக்
கண்டவுடன் நாணம் கொள்ளும்!

மலரில் படர்ந்திருக்கும்
மணம்கூட - உன்
அழகைக் கண்டு சினம் கொள்ளும்!

மலையில் ஒளிந்திருக்கும்
நீர்கூட - உன்னைக்
காண்பதற்கே அருவியாய் வரும்!

மண்ணில் புதைந்திருக்கும்
விதைகூட - உன்னைக்
காண்பதற்கே முளைத்து எழும்!

ஆலம் விழுதுகூட
உன்னைத் தொடுவதற்கே
மேலிருந்து கீழ்விழும்!

இருட்டில் உன் அழகைக்காண
சூரியனை ஒளித்துவைத்து
நிலவுன்னை எட்டிப்பார்க்கும்!

வெளிச்சத்தில் உன்னைக்காண
நிலவுதனை சுட்டு வீழ்த்தி
சூரியனும் உனை ரசிக்கும்!


விதிவிலக்கா நான்மட்டும்!
வந்துவிட்டேன் உனைக்காண்பதற்கு!

என்னையும் அறியாமல்
என்னுள்ளோர் கம்பனை
நீயின்றே படைத்துவிட்டாய்!

Goa Advertisement முற்பகல் 4:45


உக்காந்து யோசிப்பாங்களோ.......


[மின்னஞ்சலில் பெறப்பட்டது]

நானும் என் காதலும்..... முற்பகல் 8:06

அன்பே என்றாள்!
அமைதியாய் நின்றேன்!

பிடித்திருக்கிறதா என்றாள்!
பார்வை மட்டும் வீசினேன்!

காதலிக்கிறாயா என்றாள்!
கண்ணீர் சிந்திவிட்டேன்!

காரணம் தான் என்ன?

கூலி வேலை செய்து
கஞ்சியூத்தும்
தந்தையை நினைக்கிறேன்!

பாத்திரம் தேய்த்து
படிக்க வைக்கும்
தாயை நினைக்கிறேன்!

இயலாது என்னால்!
இப்போது காதலிக்க!

காதல் தேர்வு!!! முற்பகல் 5:45

தேர்வுக்கு தயாரானான்!
கல்லூரி தேர்வுக்கல்ல,
காதல் தேர்வுக்கு!

தேர்வெழுதி சமர்ப்பித்தான் - சில
தவறோடு விடைத்தாளை!

திருத்தினாள் கடிதத்தை
தெரிவித்தாள் முடிவினை!

அடைந்தானே தோல்வி,
அடையாளமே தாடி!

அரியர்ஸ் எழுதினான்,
அதே பெண்ணுக்கல்ல,
அவள் தங்கைக்கு!

மீண்டும் தோல்வி,
மனமுடைந்தே போனான்!
தோல்விக்காய் அல்ல - மற்றுமோர்
தங்கை அவளுக்கில்லையே - என்று!

வேட்டைக்காரன் - சில ப்ளஸ்கள் முற்பகல் 10:42

வேட்டைக்காரனை ஏற்கனவே பல்வேறு கோணங்களில் அலசி ஆராந்து தோய்த்து தொங்கபோட்டுவிட்டார்கள் நமது நண்பர்கள். அதுவே என்னை வேட்டைக்காரனை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்று தூண்டியது.

பக்கத்தில் இருக்கும் திரை அரங்கிற்கு சென்று படம் பாத்தேன். இந்த படத்தில் ஏராளமான் ப்ளஸ்கள் இருப்பதாய் நான் உணர்ந்தவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்:
  1. நல்ல எண்ணங்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் நடக்கிற போட்டியில் நல்ல எண்ணங்களே ஜெயிக்கும், ஜெயிக்க வேண்டும் என்கிற உலகிற்கு தேவையான ஒரு கருவை படமாக்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. [படத்தில் நல்ல எண்ணங்கொண்ட ஹீரோ விஜய், கெட்ட எண்ணங்கொண்ட  வில்லனை அழிக்கிறார் என்று சொல்லவும் வேண்டுமோ]
  2. நீ என்னவாக வேண்டுமென நினைக்கிறாயோ அதற்காக கடினமாக உழைத்தால் நிச்சயம் அதுவாக மாறுவாய் என்கிற ஒரு பாசிடிவ் கருத்தையும் இயக்குனர் கதையினூடே சொல்லாமல் சொல்லியிருக்கிறார். [படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டுமென கனவு காண்கிறார். அதில் ஜெயக்கவும் செய்கிறார் என்பதை நீங்கள் யூகித்திருந்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்]
  3. எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் ஹீரோ வந்து அநியாத்தை தட்டி கேட்பது என்பது முடியாத காரியம். அதனால் மக்களே அநியாயங்களை தட்டி கேட்க பழக வேண்டும் என்பதை ஒரு காட்சியால் விளக்கியிருக்கிறார்கள். [மார்க்கெட்டில் வில்லன் வந்து சிறுதொழில் வியாபாரிகளை மிரட்டும் ஒரு காட்சியில், அவர்களும் பதிலுக்கு அரிவாளை தூக்கி வில்லனை மிரட்டுகிறார்கள்]
  4. "நான் அடிச்சா தாங்க மாட்ட.." என்கிற பாடலில் தன்னால் என்னவெல்லாம் முடியும் என்கிற பட்டியலை முழு தன்னம்பிக்கையோடும்  தலைகனமில்லாமலும் சொல்லியிருக்கிறார். 
  5. ஹீரோவிற்கு எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், தன்னுடைய காதலிக்காக நேரம் ஒதுக்க மறக்கவில்லை. ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளிக்கு அவர் ஒரு டூயட் பாட தவறவில்லை. இன்றைய அவசர உலகத்தில் நம்முடைய காதலிக்காகவோ மனைவிக்காகவோ ஏதேனும் நேரம் ஒதுக்குகிறோமா என நம் எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்கிறான் வேட்டைக்காரன். 
  6. ஹீரோ விஜய் ஒரு கல்லூரி மாணவராக படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் படத்தில் ஒரு காட்சியில்கூட புத்தகத்தை கையில் எடுத்ததில்லை. வெறும் புத்தகபுழுவாக மட்டும் இருப்பதினால் என்ன பயன் என்பதை நமக்கு சொல்லாமல் புரியவைத்திருப்பது வேட்டைக்காரனின் வெற்றி.
  7. நான்காண்டுகளாக +2 எழுதிக்கொண்டே இருக்கிறார் நமது ஹீரோ விஜய். ஆனால் தேர்ச்சி பெற முடியாமல் தவிக்கிறார். தனக்கு படிப்பு ஏறவில்லை என ஒத்துக்கொள்ளும்  தைரியம் இன்றைக்கு இருக்கிற எந்த முன்னணி ஹீரோவால் முடியும்? இமேஜ் பார்க்காமல் இந்த பாத்திரத்தை அவர் ஏற்றிருப்பதே படத்தில் மிகபெரிய ப்ளஸ்ஸாக எனக்கு தோன்றியது.
இப்படி படத்தில் ஏராளமான பிளஸ் இருந்தும் ஏன் பலர் இந்த படத்தை தாறுமாறாக கிழித்தார்கள் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை......யாரேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்........

ஒட்டு போட்டு என்னை ஊக்கப்படுத்துங்கோ......